"சிறையிலிருந்து வெளியே சென்று தேவையான மருத்துவ சிகிச்சைகளைப் பெற மட்டுமே தங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. மாறாக, இதனை நீங்கள் ஜாமீனாகக் கருதிவிடக் கூடாது'' என்ற எச்சரிக்கை யுடன் சாத்தான்குளம் தந்தை -மகன் இரட்டைப் படுகொலையில் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்ரீதருக்கு ஜாமீனை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு. இதனால் வழக்குக்கு சிக்கலாகுமா? என்பது தான் பலரின் கேள்வி.

Advertisment

கடந்த 2020ஆம் ஆண்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக் கைதிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீசாரின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்தனர். இந்த படுகொலையை மறைத்து, கொரோனாவில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அப்போதைய முதல்வர் எடப்பாடி வரை மாற்றிப் பேசினர்.

Advertisment

"இவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. அதிக அளவிலான காயத்துடனேயே கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டனர். காயங்களே அவர்கள் உயிரிழப்பிற்கான காரணம்' என நக்கீரன் ஆதாரத்துடன் சிறை மருத்துவர் வெங்கடேஷ் எழுதிய மருத்துவக்குறிப்பை வெளியிட்டு, போலீஸாரின் கொடூர முகத்தை வெளிப்படுத்தியது. தொடர்ச்சியாக இன்ஸ்பெக்டர், இரு எஸ்.ஐ.கள், ஒரு சிறப்பு எஸ்.ஐ., தலைமைக்காவலர்கள், காவலர்கள் உள்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதில் சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மட்டும் மதுரை மத்திய சிறையிலேயே கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தார். சி.பி.ஐ.யின் தொடர் விசாரணை முடிவில், வழக்கு மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுவரை 105 சாட்சியங்களின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், "மெடிக்கல் கிரவுண்டில்' முதன்மைக்குற்றவாளியாகக் கருதப்படுபவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைப் படுகொலை வழக்கில், முதன்மைக் குற்றவாளி யாகக் கருதப்படும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவிலோ, 19.06.2020 தேதிக்கான என்னுடைய டைரியின்படி, சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தேதி மற்றும் நேரத்தில் காவல் நிலையத்தில் இல்லை. அந்த நேரத்தில் அமுதுன்னாக்குடி, பஜார் பேருந்து நிலையம், பன்னம்பாறை, சுப்புராயபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்புப்பணியில் இருந்தேன். வதந்திகள் காரணமாக,  கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக ரிமாண்ட் செய்யப்பட்டேன். 2013ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் முதுகுத்தண்டிலுள்ள C4, C5 பாதிக்கப்பட்டது. அப்பொழுது நடந்த அறுவைச் சிகிச்சையில் C4, C5-ல் மெட்டல் பிளேட் வைக்கப்பட்டது. இதனால் தற்பொழுது இரு கைகளும் செயலற்ற நிலையில் உள்ளன. அதுபோக, கழுத்து, இடது தோள்பட்டை, இடுப்பு, இரண்டு முழங்கால், வலது கால் கணுக்கால் பகுதிகளில் வலி அதிகம் காணப்படுகின்றது. அதுதவிர, கண்களின் லென்ஸ்களை சரிசெய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பல் வலியும் உள்ளது. ஒவ்வொரு பற்களிலும் தேவையான சிகிச்சை எடுக்க வேண்டும். என்னை குற்றஞ்சாட்டிய 52 சாட்சிகளிடமும் குறுக்கு விசாரணை முடிந்துவிட்டது. இதுவரை சரியாக நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொள்கிறேன். என்னால், விசாரணை செயல்முறைக்கு இடையூறு வராது'' என்கின்றது.

Advertisment

santhakulam1

முன்னதாக,  ஸ்ரீதரின் (Cri.M.P எண். 3613 & 3614/2020, 84/2021, 116/2022 மற்றும் 4008401/2022) நான்கு ஜாமீன் மனுக்கள் குற்றத்தின் தீவிரத்தன்மை காரணமாகவும், சாட்சி களை அவர் சிதைப்பார் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம். உயர் நீதிமன்றத்தில் 7 முறை தாக்கல் செய்யப்பட்ட ஸ்ரீதரின் மனுக்களும் (Crl.O.P (MD) எண்கள் 9274 & 9290/2020, 12665 & 12666/2020, 11841 & 11844/2022, 6123 & 6127/2023, 15463 & 15466/2023, 1430 & 1434/2024 மற்றும் 5467, 5470, 5619/2025 ) அதே காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்திலோ இதற்கு முன்னதாக (SLP (Crl.)  எண். 3634, 3635/2021 மற்றும் 26711/2024) ஆகிய இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதே உச்சநீதிமன்றத்தில் மூன்றாம் முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் "மெடிக்கல் கிரவுண்டில்' ஜாமீன் பெற்றுள் ளார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்.

இதுகுறித்து பேசிய மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாஸ்கர் மதுரமோ, "எந்தவொரு சிறைச்சாலையிலும் கைதிகளின் உடல் நலத்தை கூர்ந்து கவனித்து மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள், சிகிச்சைகள் வழங்குவது சிறைத்துறையின் தலையாய கடமை. மதுரை மத்திய சிறைச்சாலையில் மருத்துவக் கண்காணிப்பு உயர் ரகமாக இருக்கும். ஜாமீனுக்கான மனுவில், 2013-ல் நடந்த விபத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக சிகிச்சை கொடுக்கப்பட்டி ருக்கும். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீனுக்காக குறிப்பிட்டதை தீர ஆய்வு செய்து, தவறு இருக்கும் பட்சத்தில் ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும். அப்பொழுதுதான் பாதிக்கப்பட் டோர்கள் ஆறுதலடைவார்கள்'' என்கிறார்.